Monday, June 29, 2009

ஷோபிகண்ணுவின் பின்னறிவிப்பு

நவநீதனின் முன்னறிவிப்பு என்றிருந்திருக்க வேண்டிய இந்த பதிவின் தலைப்பு ஷோபிகண்ணுவின் பின்னறிவிப்பு என மாறக் காரணம் என் சோம்பேறிதனமா இல்லை பணம் கட்டாததால் கட்டான ஏர்டெல் ப்ராண்ட்பேன்டா என்பதை பாப்பையாவையோ லியோனியையோ வைத்து பட்டிமன்றம் நடத்த தேவையில்லை முதலாவதுதான் உண்மையென்பது என்னையறிந்தவர்களுக்கு தெரியும்.

அப்படியென்ன அறிவிப்பென்றால் இனிமேல் நான் ( நவநீதனாகிய) இனிமேல் ஷோபிகண்ணு என்ற பெயரில் கொஞ்ச நாள்(பால் புளிக்கும் வரை) உலாவர தீர்மானித்துள்ளேன் என்பதை இந்த உலகத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.

அதென்ன ஷோபிகண்ணு? காத்து ஏன் அடிக்குது? ஏன் வெயில் அடிக்குது? வாத்தியார் ஏன் அடிக்கிறார் என எல்லாவற்றிற்கும் இங்கே விளக்கம் சொல்ல வேண்டியுள்ளதால் நானும்......

பாரதியார் மேல் கொண்ட பற்றுதான் சுப்புரத்தினம் என்பவ‌ர் பாரதிதாசன் என மாறக் காரணமாயிற்று. அப்படியேதான் நவநீதனும் ஷோபிகண்ணுவாகிய கதை. பொதுவாக புனைப்பெயர் என்பது மற்றவரிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்த வித்தியாசமாக ஒரு அடைமொழியையோ, பெயரையோ முக்கியமாக யாரும் பயன்படுத்தாத ஒன்றை வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கொஞ்சம்கூட வெட்கமேபடாமல் பசங்க படத்துல வந்த அந்த பேரை காப்பியடிச்சுகிட்டயே என நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது.

இதற்கு என் சமாளிப்பு என்னவென்றால்...

வழக்கத்துக்கு அதிகமா கொஞ்சம் லேட்டாயிட்டா அதுக்குமேல தூக்கம் வற கொஞ்சம் லேட்டாகும்.( நீ மட்டும்தான் லேட் பண்ணுவியா நானும் பண்ணுவேன் அப்படிங்கற தூக்க கொழுப்பு அது). அன்னைக்கு அப்படிதான் எனக்கும் தூக்கம் வரலை. சரி தூக்க மாத்திரை போட்டு தூங்கிறதுக்கு ஏதாவது படம் பார்த்தா உடம்புக்கு கெடுதல் இல்லாம தூங்கலாமேன்னு தேடுனப்ப மாட்டுச்சு பசங்க படம். (நன்றி: லைம்வேர், பிட் டோரென்ட், கூகிள்)

இராத்திரி மணி 2 க்கு படம் பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா... பின்னி பெடலெடுத்திருக்கார் டைரக்டர். அப்படியே கிர்ருன்னு இருந்துச்சு படம். காமெடி கலக்கல்னா.. ரொமான்ஸ் சூப்பர். அதுல வர்ற அந்த ஷோபிகண்ணு கேரக்டர் அப்படியே ஹார்டுல பச்சக்ன்னு ஒட்டிக்கிச்சு. அப்படி பிடிச்சுப்போச்சு எனக்கு.விடியக்காலை 4.30 மணி ஆயிடுச்சு. முழுப்படத்தையும் பார்த்துட்டுத்தான் தூங்கினேன். அப்படி ஆனி அடிச்சுமாதிரி ஒட்டிக்கிட்டதாலதான் 20 வருஷமா இருந்த நவநீதன்கிற‌ பேருக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு ஷோபிகண்ணுகிற பேருக்கு ஒரு சீட்டு எடுத்திட்டேன்.

இன்னும் சில காலம் இந்த பெயரில்தான் என் வயக்காட்டில் வெள்ளாமை செய்யப் போகிறேன்.

என்றும் அன்புடன்
ஷோபிகண்ணு

Thursday, June 25, 2009

நானும் விகடனில்....

ஆனந்த விகடன், கூகிள் இத ரெண்ட‌பத்தியும் பேசாத எழுதாத பதிவர் யாரச்சும் இருக்காங்களான்னு தேடும்போது என் கண்ணுக்கு நான் மட்டும்தான் தெரிஞ்சேன். என்ன சங்கதின்னு ஆராய்ச்சி செஞ்சதன் முடிவு இது.

பதிவு எழுதற கொஞ்சம் பேர் சாப்ட்வேர் இஞ்சினியர் அவிங்க இன்னைக்கு டாப்பு கூகிள பத்தி சேதி சொல்றது ஒரு இது......

பதிவுலகத்தில இருக்கிற மிச்சம் கொஞ்சம் பேர் இலக்கியம் அது இதுன்னு விசயம் தெரிஞ்சவங்க பத்திரிக்கை உலகில் ஜாம்ப‌வான் ஆனந்த விகடன பத்தி பேசறது ஒரு இது......

அட நமக்கு ரண்டுலயுமே சம்பந்தம் இல்லையே அப்படின்னு நொந்த நேரத்துல கடவுள் கண்ணுல பட்டார்.

ஆண்டவா எல்லாம் விகடனில் நான், யூத் விகடனில் என் கதைன்னு கதி கலங்க வைக்குறாங்க, என் கதை ஒன்ன போட கருனை காட்டுங்க கால்ல விழுந்துட்டேன்.
ரொம்ப ஜெர்கான அவரு தம்பி.. ஆசை படலாம், ஏன் பேராசைகூட‌ படலாம் ஆனா இந்த மாதிரியெல்லாம் காட்டு தனமா ஆசைபடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு...

ம்ம்ம்னு கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்த்து மனசிறங்கி.. சரி வேற ஏதாச்சும் கேழுன்னாரு..
நானும் கூச்சப்படாம என்னை ஜாவா எக்ஸ்பெர்ட் ஆக்கிருங்கன்னு கேட்டேன்... இத கேட்டவுடனே பயங்கற டன்சனாயி கேட்டாரு " உனக்கு எத்தனை கதை பப்ளிஷ் ஆகனும்?"

இப்படி வரம் வாங்குன அடுத்த நாளே எங்கதையும் யூத்ஃபுல் விகடன் இனைய தளத்தில வந்துருச்சு...

அதனால இப்ப நானும் விகடனில்....

அடுத்து வருவது:

விகடன்ல என் கதை சீக்கிரமா வரும்னு நெனைக்கிறேன். இப்பெல்லாம் நான் கவிச்சி சாப்பிடறதேயில்லை. இந்த வாட்டி நூறு தேங்காய் உடைக்கிறதா வேண்டுதல். ம் பார்போம் அவருக்கு எப்போ தேங்காய் தேவைபடுதுன்னு..

Thursday, June 18, 2009

டெஸ்டரும் டெவலப்பரும்

வரப்பு தகராறும் இல்லை!
வாய்க்காத் தகராறும் இல்லை!! ‍இருந்தாலும்
சண்டையிடுகின்றனர்
டெஸ்டரும் டெவலப்பரும்.

Sunday, June 7, 2009

மங்கலத்தார் ப்ளாக்கிற்கு கண்ணீர் அஞ்சலி

இதற்கு முன் இதை படிப்பது இந்த பதிவை படிக்கும் போது தோன்றும் கேள்விகளை தோன்றாமல் இருக்க செய்யும்.

மங்கலத்தார் ப்ளாக்கிற்கு கண்ணீர் அஞ்சலி.


அட ப்ளாக்க டெலிட் பண்ணிபுட்டாங்க, ப்ளாக்க டெலிட் பண்ணிபுட்டாங்கன்னு பொலம்பிகிட்டே இருந்தா எப்படி? போன ப்ளாக்குதான் திரும்ப வரப்போகுதா என்ன? சட்டு புட்டுன்னு காரியத்த‌பண்ணிபுட்டு ஆக வேண்டியத பாக்க வேண்டியதுதான...

போங்கடா போய் போஸ்டர கீஸ்டர அடிச்சு ஒட்டுங்கடா. பெருசு ஒன்னு ப்ராக்டிகலாக பேசியது.

மங்கலத்தார் ப்ளாக்கிற்கு கண்ணீர் அஞ்சலி.






இங்ஙனம்
நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் எல்லாம் இல்ல. நாந்தேன் ஓனர் நவநீதன்.



நானும் எவ்ளோ நாள்தான் குய்யோ முய்யோன்னு கத்திகிட்டு இருக்க்றது. விழுந்த தடைகல்லையும் படிக்கற்கலாக்கி கிளம்பிவிட்டேன்... மீண்டும் ப்ளாக் எழுத... உங்கள் ஆசியுடன்.

என்றும் அன்புடன்
நவநீதன்


Saturday, June 6, 2009

சிறை வாசம்

நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி நடக்கும் என்று. ஜெயில் என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த நான் ஜெயிலுக்கு போவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. "எல்லோர் வாழ்விலும் இப்படித்தான் சில விஷயங்கள் நடந்து விடுகின்றது. சினிமாவிலும் மற்றவர் வாழ்விலும் பார்கின்ற சில‌ விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் போது சில சமயம் பிரமிப்பும், அதிக எதிர்பார்ப்பின் காரணமாக ஏமாற்றமும் ஏற்படுவது இயல்பே." அந்த வகையில் இந்த ஜெயில் அனுபவம் எனக்கு
பிரமிப்பை ஏற்படுத்தியது.

நேற்றைக்கே சற்று சந்தேகம், நாளைக்கு ஜெயிலுக்கு போக வேண்டிவரலாம் என்று. நினைத்தபடியேதான் நடந்தது. சரியாக பதிணோறு மணிக்கு சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஆஜரானேன். சென்னை மத்திய சிறைச்சாலை என்பதை படிக்கும்போது திக்கென்று இருந்தது.
ஒரு பயம் மனதுக்குள், அனிச்சை செயலாய் கை, கால் உதரெலுடுக்காததுதான் பாக்கி.
எங்கும் கூட்டம், தெரிந்த முகங்கள் தென்படுகிறதா என தேடுகிறது மனம், ஏதோ உறவினர் திருமணத்தில் சொந்தகாரர்களை தேடுவது போல்.

பெரிய இரும்பு கேட்டில் இருந்த சின்ன கதவை திறந்து உள்ளே அனுப்பினார்கள்.
சிதிலடைந்த சுவர், துருப்பிடித்த இரும்பு கம்பி ஜன்னல்கள், கிரீச் என சத்தம்
போடும் கதவுகள் என ஒரு பாழடைந்த பங்களாவிற்குரிய எல்ல தகுதிகளோடும் இருந்தது ஜெயில்.

திகிலுடன் பயந்துபோய் நின்று கொன்டிருக்கும்போது ஒரு குரல் கேட்டது எனக்கு மிக அருகில் ஒரு குரல்....
"சுண்டல், பட்டாணி, வேரிக்கடலை. வாங்கிக்கிங்க சார், அஞ்சு ரூபா தான் சார்."

என்ன ஜெயிலுக்குள்ள வேர்க்கடலை எல்லாம் விக்கறாங்க என்ற யோசித்த போதுதான் நேற்று நண்பன் சொன்னது நினைவிற்கு வந்தது.

" டேய்! சென்ட்ரல் ஜெயில இடிக்க போறாங்களாம். அதனால ஒரு வாரத்துக்கு மக்கள்
சுத்தி பார்ப்பதற்காக‌ விட்டுறுக்காங்க, வா போய் ஒரு ரவுண்டு சுத்திட்டு
வரலாம்."

அ ன் பு ட ன் நவநீதன்.

வென்ற பின்னாவது தீரூமா இந்த‌ வலி?

தேதி : ஜனவரி 30, 2009
நேரம் : காலை 10 மணி
இடம் : அமெரிக்க காரியாலயம்(American Consulate)

அமெரிக்காவில் உள்ள 30 கோடி சொச்ச மக்களும் தூங்கிக்கொண்டிருக்க, நான் வரிசையில் காத்துக் கொண்டிருந்தேன் சென்னையில்.அமெரிக்கா செல்லும் ஆசையின் முதற்கட்ட பணிகளை நிறைவேற்ற. வேறென்ன? விசா வாங்க நேர்முக தேர்விற்கு போயிருந்தேன்.

முன்னனி தனியார் நிறுவனத்திலிருந்து சென்றதால் நீல நிற கோப்பு(Blue File) கொடுத்து விட்டிருந்தார்கள்(அதற்கெல்லாம் மதிப்பில்லையாம். எல்லாம் ஒன்றுதானாம்). எல்லோருக்கும் ஒரே வரிசைதான். நீண்ட வரிசையில் நான்காவதாய் நின்று கொன்டிருந்ததில் ஒரு மெதப்பு வேறு.

"சார், 9 மணிக்கு இன்டர்வியூ இருக்கறவங்க வாங்க" என்ற போது, என் பின்னாலிருந்த மொத்த கூட்டமும் முன்னால் சென்றிருந்தது.

"ஏன்டா? இப்படி என்ன‌ நோகடிக்கறிங்க" என்று நான் கடைசியில் புலம்புவதை கவனிக்க எவனுக்கும் நேரமில்லை.

வரிசையில் நின்று கொன்டே இருந்த போது கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்கவுள் கண்ணில் ஓடியது.

எப்போது விசா அப்ளிகேசன் பதிவு செய்தேனோ, அன்றிலிருந்து காலை, பகல், இரவு ( சாப்பாட்டிற்கு முன்/பின்) என ஏதோ டாக்டர் மருந்து கொடுத்து தவறாமல் சாப்பிட சொன்னது போல் மூன்று வேலையும் கனவு கண்டுகொன்டிருந்தேன்.
"யூஎஸ்ல அரிசி சாப்பாடு கெடக்கறதே கஷ்டமாமே?" என பழைய ஆன் சைட் ரிட்டன்களிடம் விசாரனை வேறு.

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல"( "நீ மொதல்ல விசா வாங்கு" என மனசிற்குள் நினைத்திருப்பானோ?) "இன்டியன் ரெஸ்டாரென்ட் இருக்கு!, சமாளிச்சுகலாம்" என்றது ஆன் சைட் ரிட்டனின் அறிக்கை.

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லீங்க? நெறைய இன்டியன் ரெஸ்டாரென்ட் இருக்கு, சமாளிச்சுகலாம்" என்ற அதே பிட்டை என்னையும் மதித்து கேட்ட நாலு பேரிடம் அள்ளி கொட்டினேன், ஏதோ வாரம் ரெண்டு வாட்டி யூஎஸ் போயிட்டிருக்கிற மாதிரி.

"மச்சான், எனக்கு ஒரு லேப்டாப் டா"
"மச்சான் எனக்கு ஒரு ஐபாட்"
"ஏன்? உனக்கு லேப் டாப் வேண்டாமா?" என்றதற்கு, "அதில்லைடா லேப்டாப்னா நீ பணம் கேப்ப, ஆனா? ஐபாட்'னா நான் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்ட" என்ற நண்பனின் கொள்கை விளக்கம் புல்லரிக்க வைத்தது.

"மச்சான் கண்டீப்பா ஒரு டிஜிடல் கேமரா வாங்கிட்டு வா."

"வாங்கறன்டா!. யூஎஸ் போனவுடனே மொதல்ல அதைதான்டா வாங்கனும்."

"சார், ஃபைல வாங்குங்க மொதல்ல." செக்யூரிட்டி என் காதில் கத்தியதும்தான் சுய நினைவிக்கு வந்தேன்.

"நாம எங்க இருக்கறோம்?" என்னது அமெரிக்காவும் சென்னை மாதிரிதான் இருக்குதுன்னா பாத்தா, 23 C பஸ்சு போயிட்ருக்கு அண்ணா மேம்பாலத்துல‌.

அட கஷ்டமேன்னு நொந்து உள்ள போனேன்.

செக்கியூரிட்டி செக், டாகுமெண்ட் வெரிஃபிகேசன், ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேனிங், டிடி செட்டில்மென்ட் எல்லாம் முடிந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தேன் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன்.

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நகன்ற வினாடி முல்லை(அப்படியொரு ஃபீலிங்) அங்கிருந்த கடிகாரத்தில் பார்த்தேன். சந்தேகத்தை பின்னால் நின்று கொண்டிருந்தவனிடம் கிசுகிசுக்க, அவனும் அதையே வழி மொழிய, அங்கிருந்த ஊழியர் மட்டும் "அதெல்லாம் சரியாதான் வேலை செய்யுது" என்று சொல்லிவிட்டு கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அட்ரஸை கொடுத்த போது எனக்கு புரியவில்லை.

நொடிகள் யுகங்களாகின( அதர பழசான உதாரணம்தான் என்ன செய்ய?) பல நூறு வருடங்கள்(தோராயமா) கழித்து என் முறை வந்தது.

போனவுடன் நான் சொல்ல நினைத்த குட் மார்னிங்கை கன்சலோட் ஆபிஸர் சொல்லிவிட்டார்( சிலம்பாட்டத்தில் கருனாஸுக்கு நடந்த‌தை போலவே எனக்கும்)
பதிலுக்கு நானும் "குட் மார்னிங்,ஹவ் டூ யூடூ" என்று ஒரு பிட்டை போட்டேன்.

கொஞசம் கூட மதிக்காமல்(தயவு செஞ்சி இந்த விச‌யம் நம்மளோடவே இருக்கட்டும். என்னது? உங்ககிட்ட சொன்னத வெளியில

சொல்ல வேண்டாமா? இது டூ மச்! ஆமா!) பாஸ்போட்டை கேட்டார். பிள்ளையாருக்கு தோப்பு கரணம் போடுவது போல் பவ்யமாய் கொடுத்தேன்.

"எவ்வளவு நாளா இந்த‌ கம்பெனியில் பண்னையம் பன்ற?" , "இந்த கிளைன்ட் கூட எத்தன வருஷமா குப்ப கொட்டற?" என்ற சம்பிரதாயங்கள் முடிந்தபின் உன் தனி திறமை என்ன என்ற முக்கிய கேள்விக்கு "ஆனி புடுங்குவதில் நான் வல்லவன், நல்லவன் நாலும் தெரிந்தவன்" என்று புலம்பிக்கொன்டிருந்ததை கவனிக்க ஆபீஸருக்கு நேரமில்லை.

ஆம்! அப்போது அவர் எனக்கான புளூ சிலிப்பை (L1B- Rejected under specialized knowledge) பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.


என் மன உழைச்சலையும், சோகத்தையும், வருத்தத்தையும் மறைத்து நகைச்சுவை கலந்து எழுதியிருந்தாலும், தோற்று கலங்கிய அந்த கணமும், வேதனையும் வருத்திக் கொண்டுதான் இருக்கிறது ஒவ்வொரு வினாடியும். மீண்டும் வென்ற பின்னாவது தீரூமா இந்த‌ வலி??

அ ன் பு ட ன் நவநீதன்.

என்னது காந்திய சுட்டுட்டாங்களா?

மெசின் வாழ்க்கையான‌ இந்த‌ சாஃப்ட்வேர் இஞ்சினிய‌ர் பொழ‌ப்பில் விடுமுறைக்கும் விடுமுறைதான். ஒன்ப‌தாவ‌து அதிசியமாக (ஃபிஃப்டி கேஜி தாஜ்மஹால் தான் எட்டாவ‌து அதிசிய‌ம் என்ப‌து எல்லா ஜீன்ஸுக்கும் தெரியும்) லீவ் கிடைத்தால் தூங்கியே பொழுதை கழிப்பதை பொழுது போக்காக இல்லாமல் முழுநேரப்பணியாய் செய்வதே பொழுதுபோக்கானது எனக்கு. தூங்கியே டையர்டு ஆன மிக அரிதான் நேரங்களில் ரூம்
மெட்களிடம் மொக்கை போடுவதுன்டு. அந்த வகையறாதான் இதுவும்.

பேச்சுவாக்கில் எதற்காகவோ நண்பன் சொன்னான் "நான் காந்தி மாதிரி நல்லவன்டா"என்று

"அப்ப அவர மாதிரியே உன்னையும் யாராவது சுட்டு தள்ள போறாங்க பாரு" என்றான் நண்ப‌ன்.

எல்லோரும் அவன் போட்ட மொக்கைக்கு உச் கொன்டி கொன்டிருக்க ரூம்
மெட்டின் முகம் கொடூரமாய் காட்சியளித்து.

என்னது?, காந்திய சுட்டுட்டாங்களா எப்படா? என அதிர்ச்சியடைந்தத‌து எங்களுக்கு அதிர்ச்சியளித்தது.

"டேய் அவர சுட்டு 60 வருஷம் ஆயிருச்சுடா" என்றேன்.

"என்னது? 60 வருஷம் ஆயிடுச்சா?" என மேலும் அதிர்ந்தான்.

டேய் இவனுக்கு நட்டு கழன்டுருக்குமோ என்ற குழப்பத்தில் நண்பனை பார்கக, நட்டு மட்டுமில்ல‌ போல்டு, சைனு, ஸ்பேனரு எல்லாமே கழன்டுருச்சி என்றான் நண்பன்.

"சரி விடுறா, செத்து போய்ட்டாரு இப்ப நாம என்ன பன்ன முடியும்" என்றேன்.

"நாட்டுக்காக எவ்ளோ பாடுபட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்தாறு அந்த நல்லவர போய் கொன்னுடாங்களே, காந்திய கொன்னவன நான் சும்மா விடமாட்டேன்டா" என கொலைவெறியுடன் கத்தினான்.

"டேய், அவனும் செத்து போய்டான்டா" என்றேன் நான்.

"என்னது அவனும் செத்து போய்ட்டானா?" என்று அவன் கேட்ட போது நான் மெதுவாக மயக்கமாகிக் கொண்டிருந்தேன்.

குறிப்பு: காந்தி செத்துட்டாரா என இன்னமும் அதிர்ச்சியடையும் நம்மவர்கள்
இனியும் அதிர்ச்சியடையக் கூடாது என்ற நல்ல நோக்கில் போடப்பட்டது இப்பதிவு.

குறிப்பிற்கு குறிப்பு: இதை பார்த்து யரேனும் அதிர்ச்சியடைந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

அன்புடன் நவநீதன்

பொய்(பை)த்தியம்

அப்படியொன்றும்
அழகியில்லை‍‍ - நண்பன் சொன்னான்.
அப்படியொன்றும்
அறிவில்லை - சக ஊழியர் சொன்னார்.
அப்ப‌டியொன்றும்
அன்பானவளில்லை - தங்கை சொன்னாள்.
ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் - நான் சொன்னேன்.
இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.
ஊர் இப்போது அப்படிதான் சொல்கிறது.

காதலுடன் நவநீதன்.

நான் முட்டாள் என்று...

முழுசாய் மூணு மாசம் லீவை எவனும் அனுபவிப்பது பத்தாம் வகுப்பு முழாண்டு விடிமுறையைத்தான். பசியுடன் இருக்கும் கன்னுக்குட்டியை அவிழ்த்துவிட்டால் உடனே பால் குடிக்க மாட்டைத் தேடி ஓடாமல் கொஞ்ச நேரம் கொணாய்த்துவிட்டுதான் மாட்டை தேடி ஓடும். கன்னுக்குட்டியே இப்படியென்றால் பருவத்தில் உள்ள காளையர்கள் என்ன
செய்வார்கள்.

சினிமா, ஊர் சுற்றல், கொட்டமரத்து பீடி போய் சிகரெட், பணமரத்துக் கல் என வாழ்க்கை கல்வியை கற்க ஆரம்பித்தேன் நானும் பத்தாம் வகுப்பு விடுமுறையில்.

தினமொருமுறை குளிப்பதற்குமுன் பின்னும் முகச்சவரம் செய்து மீசை, தாடி
வளர்த்தேன்.

கம்பியூட்டர் கிளாஸ் என சில பையன்கள் டவுனிற்கு படிக்க போக, நானும் போவேன், கடலை காய் பறித்து வாங்கிய கூலியில் படம் பார்க்க. ஒல்லி பிச்சானாக இருந்தாலும் எவ்வளவு பெரிய தென்னை மரத்திலும் பத்தென்னுவதற்குள் ஏறி இறங்கி விடுவேன். தேங்காய் பறித்துபோட்டுவிட்டு பதிலுக்கு மரத்திற்கு இரண்டு காயென வாங்கியதில் விடுமுறை முடிவதற்குள் ஐநூறை தாண்டிவிட்டதில் சீருடை செலவு சரிகட்டப்பட்டது.

பதிணொன்றாம் வகுப்பு, அரை கால் சட்டைக்கு விடை கொடுத்துவிட்டு புத்தம் புது வெள்ளை சட்டை, மடிப்பு களையாமல் பேண்ட் போட்டுக் கொண்டு ஆயிரம் முறை கண்ணாடி பார்த்தேன். ஏதோ ஜில்லா கலெக்டரோ, நாட்டுக்கு பிரதமரோ ஆகிவிட்ட நினைப்பு. ட்ராயர் போட்டவனைப் பார்த்தால் ஒரு நமட்டு சிரிப்பு. நான் பெரிய மனுஷன்டா என்ற
திமிர் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் ஏற ஆரம்பித்தது.

தினம் தினம் சலவை செய்த சட்டை போட்டுக் கொண்டு போனதில் ஏகாலி கூலி ஏறியதுதான் மிச்சம்.சில நாட்களுக்கு பிறகு காக்கி பேண்ட் போடுவதும் சிறிது சலிப்பை உண்டாக்கியிருந்தது. வெள்ளை சொக்காவும் காக்கி பேண்டும் போட்டுக்கொண்டு திரிவதை கவுரவகுறைச்சலாக‌ நினைக்க‌ஆரம்பித்தேன். அரை ட்ராயர் போட்டு திரிந்த காலத்தில்
பேண்ட் போட்டிருந்தவனை பொறாமையோடு பார்த்து திரிந்திருந்தாலும், காக்கி பேண்ட் போடுவது கவுரவம் என்று எண்ணியிருந்தாலும், எல்லாம் அலுத்துப் போனது ஒரு சில மாதத்திற்குள்.

சினிமா தியேட்டரில் காக்கி பேண்ட் சகிதம் உலாவருவது ஸ்கூல் பையன் என்று காட்டிக் கொடுத்தது காரணமா? இல்லை, கலர் கலராய் சட்டை போட்டிருந்த கல்லூரி மாணவர்கள் காரணமா? என்பது மட்டும் எனக்கு புரியவில்லை.

எல்லா தில்லாலங்கடி வேலையையும் கற்றாயிற்று. நான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைவருக்கும் இலவச பீடி சப்ளை செய்தேன்.
இலவச பீடி சப்ளையை இலவச சிகரெட்டாய் மாற்றிய போது எங்கள் ஊர் தென்னை மரங்களில் தேங்காய் காணாமல் போவதாய் பேசிக் கொண்டனர்.

வழக்கம்போல் நாலு கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டேன். தானாய் ஒரு நான்கு பேர் என கூட்டம் பெரிதாகிக் கொண்டே போனதில் சில சமயம் வாழைத்தாரும் காணமல் போவதாக ஊருக்குள் பேசப்பட்டது.

கேட்போர் யாருமில்லை.சிறை கைதிகளாய் பத்து, பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நடத்தப்பட்டனர். ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கு முட்டியில்(முட்டிபோட்டார்கள்) இடப்பட்டார்கள்.நாங்கள் மட்டும் சிறகு விரித்து பறந்து கொண்டிருந்தோம்.

ஒருநாள், வகுப்பறையில் கிடந்த சிகரெட் துண்டு கிளாஸ் வாத்தியாரின் காலில் மித பட, ஐந்து நிமிடத்தில் தலைமையாசிரியரின் காலில் மிதிபட்டுக் கொண்டிருந்தேன்.

வாழைத்தார் வாங்கியவன் என்னை போட்டு கொடுக்க பஞ்சாமிர்தம் பிழிந்தனர்.

தேங்காய் திருட்டை துருவி துருவி விசாரித்ததில் சந்தேகத்தின் பலனை எனக்கு சாதகமாக்கி என்னை சட்னியாக்கினர்.

கழிவறையில் பதுக்கி வைத்திருந்த பலான பலான புத்தகங்களை வாட்ச்மேன் துப்பு துலக்க மொத்தமாய் நாறிப்போனேன்.

நடு ப்ரேயர் ஹாலில் அசிங்கத்தின் மொத்த உருவமாய் நான் நின்று கொண்டிருக்க, தலைமையாசிரியர் என்னை சரமாரியாய் திட்டியதில் கூனிக் குறுகியதை மொத்த பள்ளியும் என்னை பரிதாபத்தோடும் அனுதாபத்தோடும் பார்த்துக் கொண்டிருக்க, என் கூட்டாளிகள் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது நான் முட்டாள் என்று.

கிராம‌த்தான் நவநீதன்.

ட்ராஃபிக்.

என்ன வண்டி ஓட்டறானுங்க இவனுங்க? டுபாக்கூரு வண்டி வெச்சுகிட்டு நம்மகிட்டயே பந்தா காட்டுறானுங்களா?. நான் ஸ்கூல் படிக்கும்போதே RX 100 ஓட்டினவன். மனதிற்குள் ஒரு மேடை போட்டு அவனை அவனே வாழ்த்திக் கொண்டிருந்தான்.

மச்சான்,பொல்லாதவன் தனுஷைவிட சூப்பரா ஓட்றடா என்று சொன்னால் நம்பிவிடுவான். கல்லூரியில் நண்பர்களும் இதை டீ, பப்ஸின் மறுவடிவமாகவே நினைத்ததால், பசிக்கும் போதெல்லாம் தனுஷை திட்டினர். டிகிரி வாங்காவிடினும் கோர்ஸ் முடிந்திருந்தது. வேலை தேடிக் கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரி, நண்பனுடன் திருவல்லிக்கேனியில் அடைக்கலம் என்ற சராசரி முகவரி கிடைத்தது.

”அம்மா, சென்னை ஜாப் சர்ச் பண்ண போறேன். எனக்கு பைக்கு வேனும்.”
ஏண்டி? அரியர் கிளியர் பண்ண துப்பில்ல, இதுல வேல தேட போறாரு.அதுல பைக் ஒரு கேடு. இருக்கற பைக்குக்கே பெட்ரோல் போட வக்கில்ல, இதுல பல்சரு வேனுமா பல்சரு. போ, கலெக்டர் வேலை காலியா இருக்காம், போய் சேர்ந்துக்க.”
என்னதான் அவன் அப்பா கொதித்தெளிந்தாலும் அம்மாவிடம் அடம்பிடித்து பைக்கை வாங்கிவிட்டான். பையன் சென்னைக்கு புதுசு. பஜாஜ் பல்சர் 180 சிசி பளபளத்தது. கொஞ்சம் அதிகமாகவே விளம்பரபடுத்திக் கொண்டான்.

முதல் நாள் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போனான்.
”வாவ்..பொமனேரியன்” என ஜொள்ளினான். நயாகரா நீர் வீழ்ச்சிக்கு ஒரு போட்டி உருவானது.
ஸ்லீவ்லெஸ், முட்டிக்கு சற்று மேல் வரை ஷார்ட்ஸ், ஐபாடில் நிச்சியம் ரிக்கி மார்டினாகத்தான் இருக்க வேண்டும், அவள் உட்கார்திருக்கிறாளா இல்லையா என்ற குழ்ப்பத்திலேயே ஸ்கூட்டி பெப் மெதுவாக போய் கொண்டிருந்தது.

கொஞ்சம் சேட்டையை ஆரம்பித்தான், வேகமாய் போய் ப்ரேக் அடித்தான். வீலிங் பண்ணினான். இடிப்பது போல் போய் கட் அடித்தான். அவள் அசரவே இல்லை. ஆனால் அவனோ, இது போதும் பொண்னு ரொம்ப மெரன்டுரும் என சாதித்த திருப்தியுடன் பைக்கை விரட்டினான். பஸ்ஸிற்கு முன்னால், வேனிற்கு முன்னால் என பறந்தான். காரை தான்டினான், டூவீலரை சைடு எடுத்தான், டாடா சுமோவிற்கு டாட்டா காட்டி போனான். பின்னால் திருப்பி பார்த்தான் அவள் எந்த சலனமும் இல்லாமல் முன்பு போலவே வந்து கொண்டிருந்தாள். இவ இப்படியே ஊர்ந்துகிட்டு போனா நாளைக்குதான் வீட்டுக்கு போவான்னு நெனைக்கிறேன். அவளுக்காக பரிதாபப்பட்டபோது ரெட் சிக்னல் விழுந்திருந்தது.

எல்லாரும் வண்டியை ஆப் பண்ணியிருக்க, பத்து செக்ண்டுல என்னத்த பெட்ரோல் மிச்சமாயிரும்னு இவனுங்க வண்டிய ஆப் பன்றானுங்க என நினைத்தான்.

சிக்னல் லைட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா இது? ஒரு நிமிஷம் ஆச்சு இன்னும் கீரின் போட மாட்டேங்குறான்.
ஒரு வேளை கரண்டு போயிடுச்சா?

2....3....4...5 என் நிமிடங்கள் கரைந்தது.

அடச்சே.. என்ன கொடுமைடா இது. அஞ்சு நிமிஷம் ஆச்சு இன்னும் போடமாட்டேங்குறான்.கடுப்பில் நின்று கொண்டிருந்தான்.


எத்தேச்சையாக திரும்பினான், அப்போதுதான் கவனித்தான் அவனுக்கு பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள் எந்த சலனமும் இல்லாமல். இவ எப்ப வந்தா? என அவன் அதிர்ச்சியில் உறைந்திருந்தபோது கிரீன் சிக்னல் விழுந்திருந்தது.


அன்புடன் நவநீதன்

பார்ட்னருக்கு பெருமை தேடித்தந்த பார்ட்னர்

இசைபுயல் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று Kodak Theatre ல் முழங்கிய போது தமிழன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டான். அது போல் தமிழன் மீண்டும் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நானும் எனக்கு விருது கிடைத்த போது "I have nothing. but, (selva)partner with me" என்றுதான் சொன்னேன். (அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு)

சரி, எதுக்கு இந்த பில்டப்பு? மேட்டர் என்னன்னா நண்பர் சுரேஷ்
எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து என்னை ஊக்குவிச்சிருக்காறு (அவ்ளோ நல்லவரா அவரு?). இதை அவர் எனக்கு தெரிவித்தபோது மிகவும் மகிழ்ந்தேன். (எங்க 100 ரூவாய வாங்கிட்டு ஓடிருவரோன்னு நெனைச்சேன், நல்ல வேளை,குடுத்த காசுக்கு பொருளை குடுத்திட்டாறு.)

"இந்த விருது பெற எனக்கு தகுதி இருக்கான்னு எனக்கு தெரியல" அப்படின்னு தன்னடக்கமா எல்லாம் பேச மாட்டேன்.

இன்னும் நாலஞ்சு பிலிம் பேர், அஞ்சாறு நேஷனல் அவார்டு, கோல்டன் குளோப், பரம்பீர் சக்ரா, கலைமாமனி, பத்ம பூஷன் எல்லாத்தையும் மொத்தமா மூட்டையில கட்டி ஒரே மேடையில குடுத்தா கூட தப்பில்லைன்னுதான் நெஞ்சுமேல கைய வச்சு கூச்சப்படாம பொய் சொல்லுவேன்.

ஏன்னா? இதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்குதான் தெரியும்.

என் ஹிஸ்டரி தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

அது அக்டோபர் மாதம், 2008ம் வருஷம். எல்லாரும் கமுந்துபடுத்து கோடடித்து கொண்டிருக்க நான் மட்டும் ஆபிசில் உட்கார்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தேன்.

முதன் முதலாக ஒரு பதிவை எழுதி இப்படிக்கு "எழுத்தாளர் நவநீதன்" என்று போட்டுவிட்டு இந்த உலகம் என்னை தேடிவருகிறதோ இல்லையோ, நிச்சயம் கோடம்பாக்கத்தை எங்கள் மேன்ஷனுக்கு மாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது சூரியனை மேற்க்கில் உதயமாகவைப்பது சுலபம் என்று.

இரண்டாம்முயற்சியாக, நண்பர்களுக்கு போன் போட்டு இந்த மாதிரி இந்த மாதிரி- என் ப்ளாக்கு - படிச்சு பாருங்க - ஒரு கமெண்ட் ப்ளீஸ்.. அப்படின்னு மறைமுகா சொன்னப்பவும் இன்கமிங் கால்ன்னு கூட பார்க்காமா கட் பண்ணீட்டாங்க, மிஸ்டு கால் குடுக்கற துரோகிங்க‌. ஒரே குஷ்டமா போச்சு!.

கடைசி கட்டமா திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு அப்பறமா அந்த ஐடியா தோனிச்சு. மறுபடியும் போனப்போட்டு இந்த மாதிரி... இந்த மாதிரி... என் ப்ளாக்கு -படிக்க வேணாம் - ஒரு கமெண்ட் லெப்ட் ஹேண்ட்ல- அஞ்சு ரூபா ரைட் ஹேண்ட்லன்னு.. ஒரு ஸ்கீமு அறிமுகப்படுத்துனேன். அந்த மாசம் எங்கப்பா போண் பண்ணி என்னடா இந்த மாசம் வெறும் நூறு ரூபாதான் அனுப்பியிருக்கன்னு ஒரு காட்டு காட்டுனதுல அந்த ஸ்கீமுக்கு போர்கால அடிப்படையில தடா போட்டேன்.

மறுபடி போண் போட்டு ஒரு கமெண்டுக்கு ஒரு ரூபா தரேன்னு சொன்னப்பா, டென்ஷனானா பசங்க, என்னைய புகழ்ந்து போட்ட கமெண்ட டெலிட் பண்ணவே தனி அட்மினிஸ்ட்ரேட்டர் போட்டேன்.

இப்படி சொல்லிமாலாது நான் பட்ட கஷ்டம்.

இதை படித்த பிறகு என் மேல் பரிதாபப்பட்டு எனக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கும் விருப்பம் எவருக்கேனும் இருந்தால் பதிவு தாபாலில் அனுப்பவும் ( ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பவும் ப்ளீஸ்). என் மிகப்பெரிய சந்தேகம் பதிவை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் எனக்கும் ஆஸ்கர் கிடைத்திருக்குமோ என்னவோ என்பதுதான். ஆங்கிலத்தில் எழிதினால்தான் ஆஸ்கார் என்றால் அப்படியொரு ஆஸ்கார் எனக்கு தெவையில்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன், ( டெல்லி போகும் தலைவர்களும், வாரிசுகளும் தமிழை வாழ வைக்கட்டும். ) 30 நாட்களில் ஈசி இங்கிலீஷ் படித்தாவது பதிவு போட்டுறலாம் கேட்டு சொல்லுங்க.


இந்த மகிழ்சியான தருணத்தில் என்னை இந்த வலைபூவுலகிற்கு அறிமுகப்படுத்திய என்னுயிர் நண்பன்/தனிமை விரும்பி/நல்ல கவிஞன்/ ரூம் மெட்/ க்ளாஸ் மற்றும் கிளாசு மெட் என பரிணாமங்களை கொண்ட‌ செல்வகுமார் (எ) குட்டி செல்வனுக்கு
நன்றி சொல்லவில்லையென்றால் ரூம் வாடகை கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடிப்பான் அதனால் அவனுக்கு நன்றிகள்.

என் வாழ்வின் இனிதான தருணங்களை ஏற்படுத்திய என் பார்ட்னர் செல்வகுமார் (எ) குட்டி செல்வனுக்கு
இவ்விருதை சமர்பிக்கிறேன்.

என்றென்றும் அன்புடன் உன் பார்ட்னர்.


தலைப்பு விளக்கம்:
நான் அவனை பார்ட்னர்னு தான் கூப்பிடுவேன், அவனும் என்னை பார்ட்னர்னுதான் கூப்பிடுவான்.(கண்ட கண்ட கற்பனைக்கு தடா..)

அன்புடன் நவநீதன்.

தேவை: நண்பன்சாமி (நாத்திகர்கள் தவிர்க்க)

யார் யாருக்கெல்லாமோ நல்ல நல்ல கேல் ஃப்ரண்டே கிடைக்குது. ஆனா, நமக்கு வாய்க்கற பசங்க சகவாசம் கூட சரியாவே அமைய மாட்டீங்கது. இரண்டு பொண்டாட்டிகாரனாச்சே ஏதாவது கருணைகாட்டுவாருன்னு முருகனை கும்பிட்டும் புரோயோஜனம் இல்லை. நல்ல நண்பர்கள் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் குடுத்து ஒரு நல்ல நண்பனை தேடிக்கலாமாங்கிற அளவுக்கு நொந்துட்டேன்.

ஒரு சூப்பர் ஃபிகர் வேனும்னு எல்லா பொண்னுங்க பின்னாலேயும் அலைஞ்ச போது, அவ மூஞ்சில காறித்துப்பாத குறையா திட்டினப்பவும், அதையும் மீறி அவிங்க‌ அப்பன்கிட்ட செருப்படி வாங்கினப்பவும்கூட நான் இப்படி ஃபீல் பண்ணல. அந்த அளவுக்கு நோகடிச்சிட்டான். இத கேட்க யாருமே இல்லையா?

அப்படி என்னதான்டா நடந்துச்சு?( இது நீங்க)
ஆங், அப்படி கேளுங்க.

அவன் ( அதாங்க என் ஃப்ரண்டு. பேரு ராஜ் குமார். பால்ய சினேகிதன். சாப்ட்வேர் இஞ்சினியர், ப்ராஜெக்ட்ல இருக்கான். இப்போதைக்கு இது போதும்.) நேத்து போன் பண்ணியிருந்தான்.
டேய், இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரியா இருக்கேன், வா எங்கியாவது வெளியில போலாம்.
இல்ல, நான் வரலை.
ஏன்?
ஏன்னா? எனக்கு வேலை இருக்கு.(சும்மா கொஞ்சம் விளையாட்டு காட்டலாமென்று)
டேய், நீ பெஞ்சில இருக்கிற வெட்டி பயதானடா. வீக் டேஸ்லயே 12 மணிக்குதானடா ஆபீஸ் போற. இன்னைக்கு சனிக்கெழம என்ன வெட்டி முறிக்கிர.( இருப்பத்திமூன்று வருடமாய் கட்டிக்காத்த என் மானம் முழுவதையும் எங்களூரில் பரப்பிவிட்டான். விளையாட்டு வினையானது)
ஓவராய் என்னை கடுப்பேற்றியதில் இனைப்பை துண்டித்தேன்.

நண்பன் ஒருவன் வந்தபிறது விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு...... மீண்டும் அவன் தான்.(ஒரு நாள் அவன் கேள் ஃப்ரண்டை அறிமுகம் செய்த மகிழ்சியில் இந்த பாட்டை அவனுக்கு ரிங்டோனாய் வைத்தேன்).
அப்பா, ராஜ்தான் போன் பன்றான். எனக்கு வேலை இருக்குன்னு சொல்லீருங்க. என்று கதறிக்கொண்டு இருக்கும்போது போனை எடுத்தார்.

சொல்லு ராஜி, அவன் என்னத்த வெட்டி முறிக்கிரான், பல்லுகூட வெளக்காம காப்பிய குடிச்சிட்டு அந்த கொழந்தைகிட்ட‌ ராவுடி பண்ணிகிட்டு இருக்கான்(2வது படிக்கும் பக்கத்துவீட்டு குட்டி பிசாசு(காரணப் பெயர்)), சரி நான் சொல்லிடரேன். நீ நல்லாயிருக்கியா? ம். சரி. வச்சிருட்டுமா? ஒகே.

"என்னடா, சந்தோஷமா? நீ சொன்ன மாதிரியே எல்லாம் கரெக்ட்டா பேசிட்டாரா?" நக்கலடித்தார் என் அம்மா.
"சேலம் போறத்துக்கு ரெடியா இருக்க சொன்னான், பத்து மணிக்கு வந்து கூட்டிகிட்டி போறானாம் "என்றார் அப்பா.
"இவரு பெரிய கலெக்டரு ஒரு ஆளு வண்டியில வந்து படம் பாக்க கூட்டிக்கிட்டு போகனும் "என்றாள் என் அக்கா.
"ஏன்டா? டீவில படம் பார்த்தா பத்தாதாடா? சேலம் போறீயா, ஆடிகிட்டு?" என்ற குட்டி பிசாசுவிற்கு முத்த மழை பொழிந்தார் என் அம்மா.

கடைசியில் வேறு வழியின்றி மல்டிபிளக்ஸ்( மாம்பழத்திற்கு மட்டுமில்ல தியேட்டருக்கும் பேமசு சேலம். ) போனோம்.
என்ன படம் பாக்கலாம்?
"யாவரும் நலம்" பார்க்கலாம்னு நான் சொன்னதினாலேயோ என்னவோ, அது வேனாம், "பட்டாளம் படம் பார்க்கலாம்" என்றான்.

நதியாவை தவிர எல்லாம் கனா கானும் காலங்கள் டிக்கெட்டுகள். நான் க.கா.காலங்களை பார்க்க மாட்டேன் விளம்பர இடைவேளையில் கூட.
"இது எனக்கு20 உனக்கு18 எடுத்த ஜோதி கிருஷ்ணா டைரைக்ஷன்" என்றான்.
அது ஒரு கலர்ஃபுல், லவ், மியூசிகல் சப்ஜெக்ட் படம். இதுவும் கிட்டத்தட்ட அதே ஸ்டைல். டீன் ஏஜ் பசங்க, லவ்ஸ், கிளாமர்னு கலர்ஃபுலா இருக்கும் என்று அதுக்கே போனோம்.

படத்தில் ஒன்றும் பெரிதாக எனக்கு பிடிக்கவில்லை நதியாவை தவிர. எங்கியோ தப்பு நடந்திருக்கு என்று என் உள்ளுனர்வு சொல்லியது.
பேசாமல் கானா கானும் காலங்கள் பார்ட் 3 என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஒரு வழியாக படம் முடிந்து எழுத்து ஓடியது. இரண்டரை மணிநேரம் பொருத்தாச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துல என்னாக போகுதுன்னு, எனக்கிருந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள காத்திருந்தேன்.

"டைரக்டேடு பை ரோஹன் கிருஷ்ணா" என்று போட்டார்கள்.
"டேய்!, ஜோதி கிருஷ்ணா டைரைக்ஷன்னு சொன்னே" என்றேன்.
"ஓ! இது ஜோதி கிருஷ்ணா இல்லையா? சாரி, ரோஹன் கிருஷ்ணா க்கும் ஜோதி கிருஷ்ணா க்கும் இடையில சின்ன கன்ஃபியூசன் ஆயிடுச்சு."
"அடப்பாவி! இப்படி இரண்டரை மணிநேரம் வேஸ்ட் பண்ணிட்டயே, இது நியாமா?" என கொதித்தெழுந்தேன்.

டேய், தினமும் பெஞ்சில 9 மணிநேரம் வெட்டியா போக்கறயே அது என்னவாம்? இன்னிக்கு 2மணிநேரத்த பெருசா பேசற? அவன் மீண்டும் ஆரம்பித்தபோது மல்டிபிளக்ஸில் இருந்த 10 சப்பை ஃபிகர், 8 சுமாரான ஃபிகர், 2 சுப்பர் ஃபிகர் வித் பாடிகார்டு உட்பட அனைவரும் என்னை எப்படி பார்த்தார்கள் என்பதை சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.

அப்போதே முடிவெடுத்துவிட்டேன் நண்பன்சாமி அப்படின்னு ஏதாவது இருந்தால் தேடிப்பிடுத்து, நல்ல நண்பன் கிடைத்தால் அலகு குத்துவதாய் வேண்டிக்கொள்ளலாம் என்று.

அன்புடன் நவநீதன்.

மாடே மேய்த்திருக்கலாமோ? (நான் சாஃப்ட்வேர் இஞ்சினியர் பேசுகிறேன்)

மத்தியானம் கொஞ்சம் சாப்பாடு ஓவரா போனதால லைட்டா தம்மொன்னு போட்டுட்டு வரலாம்னு டைடலுக்கு(TIDEL) வெளியே வந்தேன். நம்மளவிட கொஞ்சம் ஒரு 5+ வயசு கூட இருக்கும்(சாஃப்ட்வேர் இஞ்சினியர் புத்தி போகுதா பாரு. சரியா 5 வருஷம்னாலும் 5+னுதான் போடறது).
என்ன தம்பி எங்க‌ வேல பாக்கிறீங்க?
டைடல் பார்க்.
"டைடல் பார்க்னா டைட்டா தண்ணியடிச்சுட்டு பார்க்ல ஃப்ளாட்டாயிருதா? ஹா.. ஹா.. ஜஸ்ட் கிட்டிங்" என்றார்.(காட்டுப்பய மாதிரி இருக்கான். என்ன இங்கிலீஷ்லெல்லாம் பேசறான். கொஞ்சம் உஷாரானேன்)
யோவ்!, இப்ப என்னதான் வேணும்? என்றேன் கடுப்பானவனாய்.
எனக்கு ஒன்னும் வேண்டாம். உனக்கு ஏதாவது வேல வேனும்னா சொல்லு, ஐடியா தர்றேன்.
யோவ், இருந்தாலும் உனக்கு எகத்தாளம் அதிகந்தான். ஆமா நீ என்ன பன்ற?
நான் பக்கத்துல இருக்கற ஃப்லிம் சிட்டில..
ஃப்லிம் சிட்டில..
மாடு மேய்ச்சிகிட்டு இருக்கேன்.
என்னது? மாடு மேய்ச்சிகிட்டு இருக்கிறயா?
ஆமாப்பா, நானும் சாப்ட்வேர் இஞ்சினியராதான் இருந்தேன். நைட் சிஃப்ட், ஆன் கால், ஸ்டேடஸ் மீட்டிங், எஸ்கலேஷன்னு கஷடபட்டுகிட்டு இருந்தேன். இப்போ எந்த தொந்தரவுமில்லை நிம்மதியா போயிட்டிருக்கு லைஃபு என்றார்.( ஆஹா..அவனா நீ)
ஆமா தம்பி நீங்க?
நான் முன்னாடி நல்லாதான் இருந்தேன். இப்பதான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்.
என்ன தம்பி சொல்றீங்க?
"நான் முன்னால மாடு மேய்ச்சிகிட்டு இருந்தேன் ஆனா, இப்ப சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆயிட்டேன்" என்றேன்..

அடடா லேட்டாயிடுச்சே, ப்ராஜெக்ட் மேனேஜர் ஏதோ ரெசிசன் விஷயமா டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னாரே. அவசர அவசரமாக கிளம்பினேன்....(ஆமா இது மட்டும் ஏன் ஃபிங்க் கலர்ல இருக்கு(pink Slip????))

குறிப்பு 1:
இந்த போஸ்ட் சும்மா தமாசுக்காக தமாஸ் பண்ணியது.

குறிப்பு 2:
எங்கள் கம்பெனியில் இதுவரை ஆட்குறைப்பு செய்யவில்லை என்பதை இந்தவார சிறந்த நகைச்சுவை என்று நீங்கள் சொன்னால் நான் கோபப்படுவேன்.

குறிப்பு 3: இந்த போஸ்டை படித்தபின் இதை உண்மையென்று நம்பி வீட்டிலேயே உட்கார்திருக்வோ அல்லது நேரடியாக மாடு மேய்க்கவோ செல்ல‌ வேண்டாம். ஆபிஸ் போய் உங்கள் ஸ்வைப் கார்டு வொர்க் ஆகிறதா என்று கன்ஃபர்ம் செய்து கொண்டு பிறகு முடிவு செய்யவும்.

அன்புடன் நவநீதன்.
(
சாஃப்ட்வேர் இஞ்சினியர்,டைடல் பார்க்)

அவளும் அட்வான்ஸ் ஜாவாவும்.

ஜாவான்னு சொன்னவொடனே காப்பி கப்பு ஞாபகம் வந்தாலும் காப்பிக்கும் ஜாவாக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ(இல்லையா?)அதே மாதிரி அவளுக்கும் ஜாவாவுக்கும் சம்பந்தமே இல்லைன்னு எல்லாரும் நெனைச்சுகிட்டு இருந்தப்பதான் அந்த சம்பவம் நடந்தது. (ஒன்னும் பெரிய ட்விஸ்ட் எல்லாம் இல்ல, சும்மா பில்டப்புக்காகதான்)

அது 2005ம் வருஷ்ம், பி.இ பைனல் இயர், செவன்த் செமஸ்டர். (ரென்டும் ஒன்னுதானடா?). ஃப்ர்ஸ்ட் டே, ஃப்ர்ஸ்ட் கிளாஸ். திடீர்னு ஒருத்தர் கிளாஸ்குல்ல( டம்ளர் இல்ல, வகுப்பறை) வறார். கிளாஸ் அட்வஸைசராமாம்.

கொஞ்ச நேரம் மொக்கைய போட்டார்.( அட நம்மாளு). அப்பறம் கேட்டார்.
"இங்க பாருங்காப்பா, இந்த செமஸ்ட்ர்ல உங்களுக்கு ஒரு எலக்டிவ் பேப்பர் இருக்கு."
"சார், எலக்டிவ்னா என்ன எலக்ரானிக்ஸ் பேப்பரா" என்றேன் நான். கிளாசில் பாதி பேர் சிரித்து மானத்தை வாங்கினாலும் சிரிக்காத பாதி பேரும் நம்ம கோஷ்டி என்பதில் அல்ப திருப்தி.
"எலக்ட்டிவ் பேப்பர்னா உனக்கு விருப்பமான பாடத்தை நீயே செலக்ட் பன்னிக்கலாம்" என்ற போது, அடடா எல்லா பேப்பரும் எலக்ட்டிவ் பேப்பரா இருந்தா நல்லா இருக்குமே என நினைத்துக் கொன்டேன்.
மேடம் தமிழ எலக்டிவா எடுத்துக்கலாம்(தமிழ் ஆர்வல‌ர்கள் கவனிக்க, தமிழ் தொண்டாற்றும் என்னம் எனக்கு அப்போதே இருந்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது) என்பதற்கு நூறு சதவீத ஆதரவு மாணவர்களிடம் இருந்தாலும் அண்ணா யுனிவர்சிட்டியில் அதற்கு இடமில்லையாம்.( நாம வேனுமுனா ரெண்டு கிரவுண்டு நெலம் வாங்கி கொடுக்கலாமா மேடம் என்றவனை கட்டாய வெளிநடப்பு செய்துவிட்டார்.)

எக்ஸ், ஒய், இசட் என புரியாத பாஷையில் சில பாடங்களும் இன்ன பிற பெயர்களோடு அட்வான்ஸ் ஜாவாவும் இருந்தது எலக்டிவ் பேப்பர் லிஸ்டில்.

"மேடம் அட்வான்ஸ் ஜாவா எடுதுக்கலாம்" என்றாள் அவள்.
யாருடா அந்த அட்வான்ஸ் அதிமேதாவி என லுக் விட்டேன். ஃபர்ஸ்ட் பெஞ்சு படிப்பு கோஷ்டி. nXn வகுப்பறையில் nத் எலமென்டாய் நான் 1st எலமென்டாய் அவள். அப்படியொரு படிப்பு, தியரி பேப்பர் என்றால் பாப்பா பின்னி பெடலெடுக்கும் ஆனால் ப்ரோகிராம் என்று வரும் போது மட்டும் டப்பா டான்ஸ் ஆடிவிடும். நான் வழக்கம்போல் ஹிட்(பிட்) லிஸ்ட்டில்.

படிக்கிற புள்ளையாச்சே, கொஞ்சம் வெவரம் தெரிஞ்சிருக்கும் என வழக்கம்போல் ஏமாந்து, மற்றவர்களும் அட்வான்ஸ் ஜாவாவே (பெட்ரமாஸ் லைட்டே) என வழி மொழிய ( என்னைக்கு நாமெல்லாம் யோசிச்சிருக்கொம்.) அதுவே எலக்டிவ் பேப்பராக முடிவு செய்யப்பட்டது.

லேப் இருந்தால் சினிமாவிற்கும், பிளேஸ்மென்ட் ட்ரெயினிங்(அப்படின்னா என்ன?) என்றால் கட் அடித்துவிட்டு ஹாஸ்டலிலும் தூங்கி எழுந்து பார்க்கையில் இரண்டு மூன்று மாதங்கள் ஓடி யுனிவர்சிட்டி ப்ராக்டிக்ல் வந்திருந்தது.

சர்வ சாதாரணமாக போனேன், தெள்ளத்தெளிவாக புரோகிராம் எழுதினேன். நான் பிட்டு வைத்துதான் எழுதுவேன் (கிறேன்) என்பது மேடத்திற்கும் தெரியும். ஆனாலும் பிட்டை புடிக்காமல் என்ன செய்ய முடியம். நான் இப்படி அழிச்சாட்டியம் பன்னி கொன்டிருக்க, எனக்கு அடுத்து இருந்த அவளை (அவளேதான் 1st எலமென்ட்) கண்டு நான் பயந்துவிட்டேன்.முடியை பிய்த்துக் கொன்டு யோசித்து கொன்டிருந்தாள். என்னத்த யோசிக்கிறா? பிட்ட எங்க வெச்சோம்னு மறந்துட்டாளா? திடீர்னு எழுத ஆரம்பிச்சா மொத லைன்ல இருந்து கடைசி லைன் வரைக்கும் பேனாவ எடுக்காம எழுத தள்ளிட்டா (ஒரு புள்ளி, ஒரு கமா மாறாம அப்படியே எழுதியிருந்தாள்). அப்படியொரு ஞாபக சக்தி. (வல்லாரை டானிக் குடிப்பாளோ என்பது என் நீன்ட நாளைய சந்தேகம்.)

எப்படியோ நானும் எழுதி முடிக்க, ப்ரோகிராம் எக்ஸிகியூட் செய்ய ஆரம்பித்தோம் (தனித் தனியாகத்தான்). கொஞ்ச நேரம் ஏபீசிடி யுடன் விளையாடி கொன்டிருந்துவிட்டு அப்பறம் சர்வரில் இருந்து ப்ரோகிராமை காப்பி செய்து கொன்டேன்.

இந்த கேப்பில் அவள் என்ன செய்து கொன்டிருக்கிறாள் என நோட்டம் விட்டேன். ரொம்ப நேரமாய் ஒரு எரர் மட்டும் காட்டிக் கொன்டிருந்தது. ஆனாலும் என்ன எரர் என சரியாக தெரியவில்லை.(தெரிஞ்சுருந்தா மட்டும்?)

ஏதோதோ செய்து கொன்டிருந்தாள். ஒன்னும் வேலையாகவில்லை. கடைசிவரைக்கும் ஒரு எரருடன் போராடிகொன்டிருந்தாள். கடைசியாக மேடம் வந்து பார்த்தார். அவர் முகம் போன போக்கில் ஏதோ ஆப்புடோய் என்று மட்டும் தெரிந்தது.
ஆமா, அட்வான்ஸ் ஜாவாவா எலக்டிவ் பேப்பரா சூஸ் பன்ன ஐடியா குடுத்தது யாரு? என்றார் மேடம்.
நாந்தான் மேடம்?
"ஜாவாவே தகிடுதத்தம் ஆடுது இதுல அட்வான்ஸ் ஜாவா ஒரு கேடு" என அவளை மட்டுமில்லாமல் என்னையும் பார்த்து திட்டியதை நான் கவனிக்காதது போல் நடித்தாலும் என் நண்பர்கள் பெருமிதமாய் பார்த்துக் கொன்டிருந்தனர்.

"சரி, சரி, கெளம்பு" என அவள் பேப்பரை வாங்கி கொன்டு , அவுட் வெரிஃபைடு வாங்குவதற்கு ரெடியாக இருந்த என் பேப்பரையும் பிடுங்கி கொன்டு போய்விட்டார்.

"ஆமா, ஏன் மேடம் அவ்ளோ டென்ஷன் ஆயிட்டங்க. அட்வான்ஸ் ஜாவா அது இதுன்னு சொன்னாங்க" என்றேன்.
"அதுதான் எனக்கும் தெரியல, ஒரே ஒரு எரர் தான் வந்துது. அதுக்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆயிட்டாங்க" என்றாள்.
"ஆமா, என்ன எரர் வந்துச்சு".
"Could not find such file or directory" என்றாள்.

அய்யகோ? எனக்கு மயக்கம் மயக்கமா வருது, நெஞ்சு வலிக்குது, அப்படியே கொஞ்சம் கைதாங்கல புடிச்சுக, . அஹ்ஹ இதுக்குதான் அட்வான்ஸ் ஜாவா எல்லாம் உள்ள வந்துச்சா? கலக்கிபுட்ட போ! ஆறு மாசம் கழுத்தறுத்த மேடத்திற்கு ஒரு லைன்ல வெச்சயே ஆப்பு!

.ம்! சரி கெளம்பு அதான் எல்லா சோழியையும் முடிச்சுட்டயே.
எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது நிச்சயம் நானும் பெயில்தான் என்று.

அன்புடன் நவநீதன்.

http://navanithan.tk

தமில் எப்போ வரும்?

"எத்தனை நாள்தான் இப்படி படியில தொங்கிட்டும் கூட்டத்துலயும் போறது, ஒரு டூ வீலர் வாங்கிடனும் மொதல்ல" பஸ்சுக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் ஒரு சில/பல நிமிடங்களில் மட்டும் எனக்கு நானே நூற்றொருமுறை சொல்லிக்கொள்ளும் மந்திரம் இது. (சபதம் என்று நீங்கள் நினைத்தாலும் அது தவறாகிவிடாது)

ஆனால், பஸ்ஸில் சீட் கிடைத்து விட்டால் போதும் (அதுவும் ஜ‌ன்னலோரம் என்றால் கேட்கவே வேண்டாம்) ஆஹா! ஜில்லுனு காத்தோட்டமா( புகை நாத்தம் உனக்கு சொகமா இருக்கோ?) வேடிக்கை பாத்துகிட்டு போற சுகம் பைக்கில போன கிடைக்குமா? "எப்படிதான் இந்த ட்ரஃபிக்கில் வண்டி ஓட்டராங்களோ? போ!" என பைக்காரர்களுக்காக (பைக்கில ஜன்னலோர சீட்டுவேற கெடையாதே? ( கிமு வில் ஹிட்டடித்த சர்.......ஜி ஜோக்கு இது) ) பரிதாபப்பட்டு கொன்டிருப்பேன்.

சிங்கார சென்னையில் வானவில் போல் எல்லா கலரிலும் பஸ் ஓடுகிறது. கலருக்கு தகுந்தாற் போல் காசும். பொதுவாக மஞ்சள் போர்டு வண்டியில் கூட நான் ஏறுவதில்லை ஐம்பது பைசா அதிகம் என்பதால். இந்த இலட்சனத்தில் மற்றொடு கலரில் புதிதாய் ஒரு வால்வோ போவதை பார்த்தேன்.

பஸ்சுக்குள் பொமனேரியன் குட்டிகள்தான்(ஹி ஹி) அதிகம் இருந்ததால் ஏதோ மகளீர் கல்லூரி பேருந்து என நினைத்து விசாரித்தபோது அரசு பேருந்துதான் என்று சொன்னார்கள்.
மேலும் விசாரித்தில் தெரிந்தது குளு குளு வசதியோடு கும்மென்று இருக்கிறதால் சாப்ட்வேர் கம்பெனி பொன்னுங்களெல்லாம் கூட இதுலதான் வராங்கலாம். (பைக் வாங்கற ஐடியாவ மறுபறுசீலனை பன்னாமல் கைவிட்டேன்) இந்த மாதிரி அல்ட்ரா டீலக்ஸ் பஸ் எல்லாம் ஒரு தடவ நான் பெங்களூர் போனப்ப வாய பொழந்து பாத்துகிட்டு இருந்தேன்.

மஞ்ச போர்டு பஸ்சுலயே ஏறாத (அமெரிக்க பொருளாதாரம் மந்தமானதே இதற்கு காரணம்) நான் எப்படி என் காசுல போவேன். ஆனாலும் ஒரு நாளைக்காவது இதுல போய் பார்க்கனும் அப்படி என்னதான் இருக்கு இந்த அல்ட்ரா டீலக்ஸ்ல(வித் ஏசி) என்ற பல நாள் கனவை நனவாக்க ஒரு இளிச்சவாயன் மாட்டுவான் என்று எதிர்பார்த்திருந்தாலும் அது என் கொலீக்காக‌ இருப்பான் என நான் எதிர்பார்க்கவில்லை.

"என்னை நோக்கிதான் வந்து கொன்டிருந்தான்".( ஆடு ரெடி அடிச்சு கொளம்பு வெச்சுர வேன்டியதான்).
ஆட்டைய போடுவது என் முடிவான பிறகு எதிரி என்ன? கொலீக் என்ன? மனதை கல்லாக்கி கொன்டு(சும்மா தமாசுக்கு) ஆட்டத்தை ஆரம்பித்தேன்.

என்னங்க பஸ்சுல வறீங்க, டூ வீலர் எங்க? என்றேன்.(வண்டி டியூ கட்டாமா தூக்கிட்டு போய்ட்டானா பைனானஸ்காரன். இருந்தாலும் இருக்கும்)

"சர்வீஸ் விட்டிக்கேங்க. அதனால இன்னிக்கு மட்டும் பஸ்ல வரதாப் போயிடுச்சு. ஆமா, இந்த‌ கூட்டத்துல முண்டியடிச்சுகிட்டு எப்படிதான் தினமும் ஆபீஸ் வர்றீங்களோ" என்றான் ( போன வாரந்தான் வண்டி வாங்கினான் அதுக்குல்ல இந்த சீனு)

"ச்சேச்.. சே! நான் இதுல எல்லாம் ஏறமாட்டேங்க. அல்ட்ரா டீலக்ஸ்ல மட்டும்தான் போவேன்." என்று நானும் என்னால் முடிந்த வரை பந்தா பன்னினேன்.

ஒரு மாதிரியாக பார்த்தான்(மஞ்ச போர்டு மேட்டரு இவனுக்கு தெரிஞ்சுருக்குமோ?)

கச்சிதமாக ஒரு அல்ட்ரா டீலக்ஸ் அப்போது வந்தது. அடித்துபிடித்து ஓடிப்போய் ஏறினேன். பிறகுதான் கவனித்தேன் ஏறியதே நாங்கள் இரன்டு பேர்தான். (பழக்கதோஷ்ம் எப்படி போகும்)

டிக்கெட்... டிக்கெட்.. எங்க போகனும்? கன்டக்டர் கடமையை செய்தார்.

"இருங்க நான் எடுக்கறேன்" என்று சொன்னவனை இதுதான் சாக்கு என "நமக்குல்ல என்ன பார்மாலிட்டி? யாரு எடுத்தா என்ன?" என்று தத்துவம் பேசியதில் மிச்சமானது ரூபாய் முப்பத்தாறு. மூன்று ரூபாய் டிக்கெட் இப்போது பதினெட்டு ரூபாய்.(இதுக்கு தனியா OT பார்த்தாதான் சாமளிக்க முடியும் போல)
இந்த சமயத்தில் ஒரு நிறுத்தகத்தில் (பஸ் ஸ்டாப் என்றும் தமிழிலில் சொல்லலாமாம்) ஒரு பையனும் இரன்டு பெண்களும்(ஃபிகர்1,2) ஏறினார்கள்.

பஸ்ஸில் ஏறிவுடன் "ஹே திஸ் பஸ் ஈஸ் நைஸ் யா" என்று கன்டக்ரிடம் இங்க்லீஷ் பேசிய போது "பாக்கறதுக்கு நம்ம ஊர்கார பய மாதிரிதான் இருக்கான் ஆனா இங்கிலீஸ்ல பேசறான் ஒருவேளை தமிழ் தெரியாதோ என நினைத்தாலும் கொஞ்சம் சந்தேகமாய்தான் இருந்தது.

இருவர் அமரும் இருக்கை ஒன்றில் ஒரு தாத்தா மட்டும் உட்கார்ந்திருந்தார். அவரிடம் "எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லிவிட்டு அமர்ந்தான்.
தாத்தாகிட்ட கூட இங்க்லீஸ்தான்யா பேசறான். கன்டீப்பா இவனுக்கு தமிழ் சுத்தமா வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

"வாவ் ட்ஸ் சூப்பர்ப்" என்றாள் ஃபிகர்1
"யூ கேன் சீ திஸ் கைன்ட்ஸ் ஆஃப் பஸ்சஸ் ஒன்லி இன் யூரோப்பியன் கன்ட்ரீஸ்" என்றான்.
"யெஸ், அஃப் கோர்ஸ்" என்றாள் ஃபிகர்2.

"ஓவர் பீட்டரா இருக்கே. ஒரு வேளை யூ எஸ் ரிட்டனா இருக்குமோ" என நினைத்து கொன்டேன்.

"சார். டிக்கெட் " என்றார் கன்டக்டர்.
"ஹவ் மச்?" என்றான்
சார், 54 ரூபீஸ் சார்( எத்தன சார்'ரு)

என்னது? 54 ரூவாயா யாருகிட்ட கதவிடுற சாதா பஸ்சுல மூன்றுவா இதுல ஏசி கீசியெல்லாம் இருக்கிறதால ஒரு பத்து ரூபா குடுக்கலாம் 54 ரூபாய்னு டபாய்க்கிரயா, பேஜாராயிடுவா என்று அவன் சென்னை செந்தமிலில் பேச ஆரம்பித்த போது, தமிழ் மட்டுமல்ல, நான் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பும் வந்திருந்தது.


அன்புடன் நவநீதன்

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP