முழுசாய் மூணு மாசம் லீவை எவனும் அனுபவிப்பது பத்தாம் வகுப்பு முழாண்டு விடிமுறையைத்தான். பசியுடன் இருக்கும் கன்னுக்குட்டியை அவிழ்த்துவிட்டால் உடனே பால் குடிக்க மாட்டைத் தேடி ஓடாமல் கொஞ்ச நேரம் கொணாய்த்துவிட்டுதான் மாட்டை தேடி ஓடும். கன்னுக்குட்டியே இப்படியென்றால் பருவத்தில் உள்ள காளையர்கள் என்ன
செய்வார்கள்.
சினிமா, ஊர் சுற்றல், கொட்டமரத்து பீடி போய் சிகரெட், பணமரத்துக் கல் என வாழ்க்கை கல்வியை கற்க ஆரம்பித்தேன் நானும் பத்தாம் வகுப்பு விடுமுறையில்.
தினமொருமுறை குளிப்பதற்குமுன் பின்னும் முகச்சவரம் செய்து மீசை, தாடி
வளர்த்தேன்.
கம்பியூட்டர் கிளாஸ் என சில பையன்கள் டவுனிற்கு படிக்க போக, நானும் போவேன், கடலை காய் பறித்து வாங்கிய கூலியில் படம் பார்க்க. ஒல்லி பிச்சானாக இருந்தாலும் எவ்வளவு பெரிய தென்னை மரத்திலும் பத்தென்னுவதற்குள் ஏறி இறங்கி விடுவேன். தேங்காய் பறித்துபோட்டுவிட்டு பதிலுக்கு மரத்திற்கு இரண்டு காயென வாங்கியதில் விடுமுறை முடிவதற்குள் ஐநூறை தாண்டிவிட்டதில் சீருடை செலவு சரிகட்டப்பட்டது.
பதிணொன்றாம் வகுப்பு, அரை கால் சட்டைக்கு விடை கொடுத்துவிட்டு புத்தம் புது வெள்ளை சட்டை, மடிப்பு களையாமல் பேண்ட் போட்டுக் கொண்டு ஆயிரம் முறை கண்ணாடி பார்த்தேன். ஏதோ ஜில்லா கலெக்டரோ, நாட்டுக்கு பிரதமரோ ஆகிவிட்ட நினைப்பு. ட்ராயர் போட்டவனைப் பார்த்தால் ஒரு நமட்டு சிரிப்பு. நான் பெரிய மனுஷன்டா என்ற
திமிர் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் ஏற ஆரம்பித்தது.
தினம் தினம் சலவை செய்த சட்டை போட்டுக் கொண்டு போனதில் ஏகாலி கூலி ஏறியதுதான் மிச்சம்.சில நாட்களுக்கு பிறகு காக்கி பேண்ட் போடுவதும் சிறிது சலிப்பை உண்டாக்கியிருந்தது. வெள்ளை சொக்காவும் காக்கி பேண்டும் போட்டுக்கொண்டு திரிவதை கவுரவகுறைச்சலாக நினைக்கஆரம்பித்தேன். அரை ட்ராயர் போட்டு திரிந்த காலத்தில்
பேண்ட் போட்டிருந்தவனை பொறாமையோடு பார்த்து திரிந்திருந்தாலும், காக்கி பேண்ட் போடுவது கவுரவம் என்று எண்ணியிருந்தாலும், எல்லாம் அலுத்துப் போனது ஒரு சில மாதத்திற்குள்.
சினிமா தியேட்டரில் காக்கி பேண்ட் சகிதம் உலாவருவது ஸ்கூல் பையன் என்று காட்டிக் கொடுத்தது காரணமா? இல்லை, கலர் கலராய் சட்டை போட்டிருந்த கல்லூரி மாணவர்கள் காரணமா? என்பது மட்டும் எனக்கு புரியவில்லை.
எல்லா தில்லாலங்கடி வேலையையும் கற்றாயிற்று. நான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைவருக்கும் இலவச பீடி சப்ளை செய்தேன்.
இலவச பீடி சப்ளையை இலவச சிகரெட்டாய் மாற்றிய போது எங்கள் ஊர் தென்னை மரங்களில் தேங்காய் காணாமல் போவதாய் பேசிக் கொண்டனர்.
வழக்கம்போல் நாலு கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டேன். தானாய் ஒரு நான்கு பேர் என கூட்டம் பெரிதாகிக் கொண்டே போனதில் சில சமயம் வாழைத்தாரும் காணமல் போவதாக ஊருக்குள் பேசப்பட்டது.
கேட்போர் யாருமில்லை.சிறை கைதிகளாய் பத்து, பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நடத்தப்பட்டனர். ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கு முட்டியில்(முட்டிபோட்டார்கள்) இடப்பட்டார்கள்.நாங்கள் மட்டும் சிறகு விரித்து பறந்து கொண்டிருந்தோம்.
ஒருநாள், வகுப்பறையில் கிடந்த சிகரெட் துண்டு கிளாஸ் வாத்தியாரின் காலில் மித பட, ஐந்து நிமிடத்தில் தலைமையாசிரியரின் காலில் மிதிபட்டுக் கொண்டிருந்தேன்.
வாழைத்தார் வாங்கியவன் என்னை போட்டு கொடுக்க பஞ்சாமிர்தம் பிழிந்தனர்.
தேங்காய் திருட்டை துருவி துருவி விசாரித்ததில் சந்தேகத்தின் பலனை எனக்கு சாதகமாக்கி என்னை சட்னியாக்கினர்.
கழிவறையில் பதுக்கி வைத்திருந்த பலான பலான புத்தகங்களை வாட்ச்மேன் துப்பு துலக்க மொத்தமாய் நாறிப்போனேன்.
நடு ப்ரேயர் ஹாலில் அசிங்கத்தின் மொத்த உருவமாய் நான் நின்று கொண்டிருக்க, தலைமையாசிரியர் என்னை சரமாரியாய் திட்டியதில் கூனிக் குறுகியதை மொத்த பள்ளியும் என்னை பரிதாபத்தோடும் அனுதாபத்தோடும் பார்த்துக் கொண்டிருக்க, என் கூட்டாளிகள் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது நான் முட்டாள் என்று.
1 comment:
காலில் மிதிபட்டுக்/பஞ்சாமிர்தம்/சட்னியாக்கினர்./மொத்தமாய் நாறிப்போனேன்.
saaaaaaaaaaaaaaaami mudiyalappa
Post a Comment